சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று நடந்த தனிப்பட்ட சந்திப்பு குறித்த தகவல்கள் என ஐ.தே.க வட்டாரங்கள் சில தகவல்களை கசிய விட்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கெதிரான குற்றவியல் பிரேரணை சமர்ப்பிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை பெற்றே, ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படுவதாக அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஐ.தே.கவின் உள்வட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று ஜனாதிபதியும், ரணிலும் மூடிய அறையில் சந்தித்து பேசினார்கள். அந்த சந்திப்பில் நடந்தவை என சில விடயங்களை பெயர் குறிப்பிட விரும்பாத ஐதேக முக்கியஸ்தர்கள் ஊடகங்களிற்கு கசிய விட்டுள்ளனர்.

தனக்கெதிரான குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்படுமா என்று மைத்திரி அதிகமாக கவலையடைந்திருந்தது நேற்றைய சந்திப்பில் தெரிந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் நாடாளுமன்ற முடிவுகளிற்கு கட்டுப்பாட்டு ஐ.தே.மு பிரேரிப்பவரை பிரதமராக்கினால் அப்படியொரு முடிவிற்கு செல்ல மாட்டோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல, சபாநாயகர் கரு ஜயசூரியவுடனும் ஜனாதிபதி இது குறித்து பேசியதாகவும், ரணில் தெரிவித்த கருத்துக்களையே சபாநாயகரும் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன்பின்னரே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதென்ற முடிவிற்கு ஜனாதிபதி வந்ததாக கூறப்படுகிறது.