நிச்சயம் உடல் எடையைக் குறைக்கணும். அதுக்கான முயற்சியை எடுக்கிறேன். ஆனா, தூங்கி எழுந்ததுமே எதையாவது திங்கணும்னுதான் மனசு ஏங்குது. கஞ்சி இருந்தாலும் அதை மொடக்குனு குடிச்சுப்புடுவேன்.”
“என் பூர்வீகம், தூத்துக்குடி மாவட்டம். கிராமத்துச் சூழல்ல வளர்ந்ததால, ரொம்ப இயல்பாதான் பேசுவேன். இடத்துக்குத் தகுந்த மாதிரி செயற்கையாப் பேச எனக்கு வராது. அந்தப் பழக்கம், சின்ன வயசுல இருந்து இப்போ வரை தொடருது. நடிப்புன்னா எனக்குக் கொள்ள பிரியம். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பெறகு எனக்கு நடிக்கிற வாய்ப்பு நெறைய வருது. தவிர, வெளிநிகழ்ச்சிகளுக்கும் என்னைக் கூப்பிட்டுப் பேசச் சொல்றாங்க. அங்க நான் பேசுற எதார்த்தமான பேச்சைக் கேட்டு, எல்லோரும் ரசிக்கிறாங்க. எனக்கும் மத்தவங்கள சிரிக்க வைக்கிறது ரொம்பப் பிடிக்கும். அதனால என் இயல்பை எப்போதும் மாத்திக்க மாட்டேன்” என்பவர், தீவிரமான உணவுப் பிரியர்.
“சின்ன வயசுல இருந்து நிறப்பாகுபாடு, புறக்கணிப்புனு நிறைய கஷ்டங்களைக் கடந்தாச்சு. இப்பவும் என்னைப் பத்தி யாராச்சும் குறை சொன்னாக்கூட அமைதியாப் பொறுத்துப்பேன். என் உயிரும் உலகமுமா இருக்கிற என் ரெண்டு மகன்களைப் பத்தி யாராச்சும் சின்னதா ஒரு குறை சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன். அந்த ஒரு விஷயத்துலதான் எனக்குக் கோபம் வரும். மத்தபடி எதுக்கும் நான் கோபமே படமாட்டேன். அதுக்காக, `உங்களுக்குக் கோபமே வராதா?’னு கேட்றாதீக.
எனக்கு சந்தோஷம்னாலும் சரி, கவலைனாலும் சரி… சாப்பாடுதான் மருந்து! அது இருந்தா போதும், கவலையை மறந்து, சிரிக்க ஆரம்பிச்சுடுவேன். சின்ன வயசுல எங்க குடும்பத்தில் ரொம்ப வறுமை. தினமும் நைட்டு நேரம், இருக்கிற சாப்பாட்டை நாங்க கூடப்பிறந்த நாலு பேரும் பகிர்ந்துப்போம். அதனாலயே சாப்பாடு மேல அதிக பிரியம் உண்டாகிடுச்சு. அதுவும், பழைய சோறு – வெங்காயம் காம்பினேஷன்னா உயிரையே விட்ருவேன். சுமாரா சமைப்பேன்; சூப்பரா சாப்பிடுவேன்! எங்க குடும்பத்தார் எல்லோருக்கும் என்னைப் பத்தி நல்லா தெரியும். எனக்குக் கோபம் வந்தா, உடனே ஒரு தட்டுல சோத்தைப் போட்டு எங்கிட்ட நீட்டிடுவாக. நானும் நேரம் காலம் பார்க்காம, உடனே சாப்பிட்டுடுவேன். கோபமும் அப்பயே போடுயிடும். இதுதான் என் வாழ்க்கை!
இப்படிக் கவலையை மறக்க, நேரம் காலம் பார்க்காம அளவுக்கு மீறிச் சாப்பிட்டதால, உடல் பருமனாகிட்டேன். அதனால இப்போ வருத்தமா இருக்கு. டான்ஸரான நான், உடல் பருமன் பிரச்னையால் டான்ஸ் சொல்லித்தரவும், டான்ஸ் ஆடவும் கொஞ்சம் சிரமப்படறேன். அதனால, நிச்சயம் உடல் எடையைக் குறைக்கணும். அதுக்கான முயற்சியை எடுக்கிறேன். ஆனா, தூங்கி எழுந்ததுமே எதையாவது திங்கணும்னுதான் மனசு ஏங்குது. கஞ்சி இருந்தாலும் அதை மொடக்குனு குடிச்சுப்புடுவேன். மதியம் சாப்பிட வேண்டாம்னு நினைச்சு, காலையிலயே அதிகமாச் சாப்பிடுவேன். ஆனா, மதியமும் சாப்பிட்டுடுவேன். இந்நிலையில நான் எப்படி எடையைக் குறைக்கிறது? நிச்சயம் உடல் எடையைக் குறைச்சுடுவேன்” என்கிறார் நம்பிக்கையுடன். இவர், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக நடனம் கற்றுக்கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
நடிப்புப் பயணம் குறித்துப் பேசும் தீபா, “ஆபத்தான தருணத்துல எலிக்குட்டியை மேல தூக்கி விடுற மாதிரி, தக்க சமயத்துல இயக்குநர் பாண்டிராஜ் சார் `கடைக்குட்டி சிங்கம்’ படத்துல எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பிறகுதான் என்னையும் பரவலா எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சது. என் பிள்ளைகளுக்காகத்தான் என் வாழ்க்கையையே அர்ப்பணிச்சிருக்கேன். அவங்களுக்காகத்தான், வாழ்கிறேன். யாரையும் காயப்படுத்த நினைக்க மாட்டேன். நகைச்சுவை வேடங்கள்ல அதிகம் நடிக்கவே விரும்புறேன். நான், ரொம்ப கடைக்குட்டி நடிகை. பலரும், `நீங்க கஷ்டப்படாதீங்க; இனி அழக் கூடாது; உங்களுக்கு சப்போர்ட் பண்ண நாங்க இருக்கிறோம்; எங்க அக்கா மாதிரி நீங்க’னு பலரும் போன்லயும் நேர்லயும் வாழ்த்துறாங்க. அதனால என் பர்சனல் லைஃப்ல எவ்வளவு கவலை வந்தாலும், அதை வெளியில காட்டிக்கக் கூடாதுனு முடிவெடுத்திருக்கேன். இனி எதார்த்தமான நடிப்பால், மக்களைத் தொடர்ந்து மகிழ்விப்பேன்” என்கிறார் தீபா,
புன்னகையுடன்.
- விகடன்