மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப்பிரதிநிதிகளும் ஒன்றுபடவேண்டும். என அரச கரும மொழி அமைச்சர் மனோகணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
சுண்ணாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியின் முன்னாள் அதிபர் வி.சிவசுப்பிரமணியம் அவரக்ளின் நினைவு பேருரை நிகழ்வு அதிபர் மு. செல்வஸ்தான் தலைமயில் நேற்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவித்ததாவது,
மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் அடாத்தாக சிங்களக் குடியேற்றம் இடம்பெறுகிறது. வன இலாகாவினருடன் தொல்லியல்த் திணைக்களத்தினரும் மிக வேகமாகப் பெரும்பான்மையினரின் குடிப்பரம்பலைத் திணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு ஆளுநர் தலைமையிலும் கிழக்கு ஆளுநர் தலைமையிலும் வடக்கு கிழக்கு நாடாளுமனற உறுப்பினர்களையும் துறைக்குப் பொருத்தமான அமைச்சர்களையும் இணைத்துக் கலந்துரையாடித் தீர்வு காணுமாறு அரசதலைவர் பணித்துள்ளார்.இந்தப் பட்டியலில் தொல்லியல்த் திணைக்களத்தினரையும் இணைத்துக்கொள்ளுமாறு நான் அரச தலைவரிடம் வலியுறுத்தினேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டு அதற்கு உடன்பட்டார்.
அடாத்தாக குடியேற்றும் இந்தத் திட்டமிட்ட காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் வடக்கிழக்குத் தலைமைகளுக்கு உண்டு. அவர்களுடன் இணைந்து அரசகரும மொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சராகிய நானும் சேர்ந்து போராடத் தயாராக இருக்கிறேன். இந்த பேரினவாதச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த நாம் ஒற்றுமைப்படவேண்டும் வடக்குகிழக்கு மட்டுமன்றி கொழும்பு- மலையகம் என அனைத்துத்தமிழ்ப்பிரதிநிதிகளும் ஒன்றுபடவேண்டும்.
கடந்த காலங்களில் நான் இது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்குகிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேரினவாதக் கட்சிகளில் உள்ள தமிழ் நாடாளுமனற உறுப்பினர்களுடனும் பேசியிருந்தேன் – என்றார்.