காவிரி டெல்டா பகுதிகளில் முன்பட்டச் சம்பாச் சாகுபடி மேற்கொள்ளும் வகையில்… கடந்த ஜூலை 18-ம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முன்பட்டச் சம்பாச் சாகுபடிக்கு நீண்டகால ரகமான, ‘சி.ஆர்-1009’ நெல் ரகம்தான் ஏற்றது. ஆனால், இந்த ரக விதைநெல் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள், விவசாயிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க’த்தின் துணைச்செயலாளர் சுகுமாறன், “ரொம்ப வருஷமாவே காவிரியில் தண்ணீர் வராததால சம்பாச் சாகுபடி நடக்கவேயில்லை. விவசாயிகள் ரொம்பச் சிரமத்துல இருந்தோம். இந்த வருஷம், ஜூலை மாசமே மேட்டூர் அணை நிரம்பிட்டதால, தண்ணீர் வர ஆரம்பிச்சது. தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்துல முன்பட்டச் சம்பா நெல் சாகுபடிக்கான வேலைகளை ஆரம்பிச்சோம். இந்தப்பட்டத்துக்கு ஜூலை 15-ம் தேதியில இருந்து ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள்ள விதைச்சாகணும். இதுக்கு 155 நாள்கள் வயசுள்ள நீண்டகால ரகமான சி.ஆர்-1009 ரகம்தான் ஏற்றது. இதுலதான் பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகமா இருக்காது. நெல்மணிகள் நல்லா திரட்சியாக இருக்கும். இந்தப்பட்டத்துல விதைக்கிறப்போ, நல்ல மகசூலும் கிடைக்கும்.
திடீர்னு அதிகமாக மழை பெய்தாலும் பாதிப்பு இருக்காது. அதே நேரத்துல வறட்சியையும் தாக்குப்பிடிக்கும். ஆனா, இந்த ரக விதைநெல் எந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகத்திலயும் கிடைக்கலை. தனியார் கடைகள்லயும் இல்லை. வேறு வழியில்லாம, மத்தியகால, குறுகியகால ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டிய நிலையில இருக்கோம். இந்தப்பட்டத்துக்கு இந்த ரகங்கள் ஏத்தது கிடையாது. மழை அதிகமா பெய்ஞ்சிட்டா கடுமையான பாதிப்புகள் வரும். அதில்லாம இந்தப்பட்டத்துல விதைக்கிறப்போ பூச்சி, நோய்த் தாக்குதல்களையும் சமாளிக்க முடியாது.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே சி.ஆர்-1009 ரக விதைநெல்லைத் தயார் நிலையில் வைக்காம அலட்சியமா இருந்துட்டாங்க. காவிரி டெல்டா பகுதிகள்ல நெல் விவசாயம்தான் உயிர்நாடி. அதுக்குத் தேவையான விதைநெல்லை வேளாண்மைத் துறை அதிகாரிகள்தான் ஏற்பாடு செய்யணும். ஆனா, அவங்க கடமை தவறிட்டாங்க” என்றார் வருத்தத்துடன்.
இக்குற்றச்சாட்டுக் குறித்துத் தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டினிடம் பேசினோம். “இது தவறான குற்றச்சாட்டு. வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக 300 டன் அளவு சி.ஆர்-1009 ரக விதைநெல்லை விநியோகம் செஞ்சிருக்கோம். இன்னும் 30 டன் கையிருப்பு இருக்கு. தனியார் கடைகளிலும் இந்த ரகம் கிடைக்கிது” என்றார்.
இந்த விஷயத்தைச் சுகுமாறனிடம் சொன்ன போது, “முழுப்பூசணியைச் சோத்துல மறைக்கப் பார்க்குறாங்க. விதைநெல் இல்லாம விவசாயிகள் திண்டாடுறது எல்லோருக்கும் தெரியும். 300 டன் நெல்லை யாருக்கு விற்பனை செஞ்சாங்கனு அவங்களால சொல்ல முடியுமா? புள்ளி விவரங்களைக் கொடுத்து செஞ்ச தவறை மறைக்கப் பார்க்குறாங்க” என்றார்.
300 டன் விதைநெல் என்னவானது என்பது நிலமகளுக்குத்தான் வெளிச்சம்…
– கு.ராமகிருஷ்ணன், படம்: தே.தீட்ஷித்