“நான் இறந்த பிறகு
எனக்காகக் கொஞ்சம் அழு, கண்ணீர் விடு
நம் இனிமையான தருணங்களை
அவ்வப்போது நினைத்துக்கொள்
ஆனால், கொஞ்ச நேரம் நினைத்தால் போதும்.
பின் அந்த நினைவுகளைத் தாண்டிச் செல்
நீ உயிரோடு இருக்கும்வரை
உன் எண்ணங்கள் உயிருள்ளவர்களுடனேயே இருக்கட்டும்” – யாரோ
மனித வாழ்வில் இழப்புகள், குறிப்பாகக் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்க முடியாதவை. அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. ஒரு தாய் தன் மகனை இழப்பதாலும், ஒரு கணவன் தன் மனைவியைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். அந்த மரணத்தின் கருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.
“ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அவளைத் தேடுவேன். அவள் இல்லை என்று உணரக் கொஞ்ச நேரம் ஆகும். பின் மனதை ஒரு பாரம் அழுத்தும். முக்கியமான ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டபோது ஏற்படும் படபடப்பு இருக்கிறதே, அது போன்ற ஒரு பதற்றம் என் நெஞ்சில் வியாபிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஆரம்பமாகிறது” – மனைவியை இழந்த ஒருவரின் மனக்குமுறல் இது.
நெருங்கிய ஒருவரின் மரணத்துக்குப் பின் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்குகளைப் பட்டியலிடுவது கடினம். ஆனாலும் இழப்புத் துயரத்தை (Grief) அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தவர்கள், அன்பார்ந்த ஒருவரை இழந்த பின் ஏற்படும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் விரிவாக விவரித்துள்ளார்கள்.
உணர்ச்சிக் கோலங்கள்
மரணத்தை அறிந்த பின் முதன்முதலில் ஏற்படுவது மனஅதிர்ச்சி. கூடவே மனம் மரத்துப் போகிறது (Shock and Numbness). மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை உள்ளம் நம்ப மறுக்கிறது. ‘இது உண்மை இல்லை’ என்று தோன்றுகிறது. நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அடுத்ததாக, மெல்ல மெல்ல உண்மை விளங்க ஆரம்பிக்கும்போது, கடும் மனவேதனை ஒருவரை ஆட்கொள்கிறது. நெஞ்சில் வேல் பாய்ந்ததுபோன்று உள்ளம் வலிக்கிறது.
அழுகையை நிறுத்த முடிவதில்லை. கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது. ஊன் உறக்கம் கொள்ள முடிவதில்லை. இழந்தவரின் நினைவு மனதை விட்டு நீங்குவதே இல்லை. இதிலிருந்து மீளச் சில வாரங்கள், மாதங்கள் ஆகலாம்.
அதோடு, அவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்ற உணர்வும் மனதை உறுத்துகிறது. “நான் அவனைப் பள்ளிக்கூடச் சுற்றுலாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது” என்று தன்னையே மீண்டும் மீண்டும் கடிந்துகொள்கிறாள், பள்ளிச் சுற்றுலாவின்போது தன் மகனைக் கடலில் பறிகொடுத்த ஒரு தாய். இந்தக் கட்டத்தில் தன்னையே குறைகூறுவதும் (“நான் மட்டும் அன்று அவர் கூடவே இருந்திருந்தால், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கலாம்”), மற்றவர்களைக் குற்றம்சாட்டுவதும் (“அந்த டாக்டர் சரியாகக் கவனிக்கவில்லை”) சகஜம்.
சில வேளைகளில் இறந்தவர் மீதே கடும் கோபம் கொள்வதும் உண்டு (“இந்த மனுஷன் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தான் போய்ச் சேர்ந்துவிட்டான்”). ஆனால் இம்மாதிரியான எண்ணங்களால் குற்ற உணர்வு பெரிதாகி, அதை வெளியே சொல்வதற்குத் தயங்கவும் செய்யலாம்.
குரலும் இருப்பும்
இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. சில வேளைகளில் இறந்தவர் தன்னுடன் பேசுவதுபோல அவருடைய குரல் கேட்கலாம்; அவர் அருகில் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். ஆனால், இவை நெடுங்காலம் நீடிப்பதில்லை.
இவ்வாறாக ஒரு மரணத்துக்குப் பின் மனஅதிர்ச்சி, மனவலி, கோபம், குற்ற உணர்வு, மன சஞ்சலம் ஆகிய பல தரப்பட்ட மனவெழுச்சிகளுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். இவை குறிப்பிட்ட எந்த ஒழுங்குமின்றி மனதை வியாபிப்பதுதான் இழப்புத் துயரத்தின் தன்மை.
எப்படிக் குறைப்பது?
பொதுவாக, இழப்புத் துயரம் ஓரிரு ஆண்டுகள்வரை நீடிக்கும். பின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். இறந்தவர் இல்லாமல் வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டி இருக்கும். ஆனாலும் இறந்தவரின் நினைவு, நிழல்போல நெடுங்காலம் தொடரும். ஒருவரது மரணத்துக்குப் பின் நடத்தப்படும் இறப்புச் சடங்குகள் சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபட்டாலும், இவை இழப்புத் துயரத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
இழப்புத் துயரம் உடலையும் வெகுவாகப் பாதிக்கிறது. மனைவியை இழந்த ஆண்களில் பலர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மரணமடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்ளும் திறனும் இழப்புத் துயரத்தின்போது குறைகிறது.
சாதாரண இழப்புத் துயரத்தின்போது ஏற்படும் மனவேதனைக்கு மருந்துகள் தேவை இல்லை. காலம்தான் இவர்களுக்கு மருந்து. சிலர் தூக்க மாத்திரையைப் போட்டுக்கொள்வது உண்டு; சிலர் மது அருந்தி மனதை மரத்துப்போகச் செய்வதுண்டு. இவை பயன் தருவதில்லை. சிகிச்சை ஏதும் இல்லாமலேயே ஓரிரு ஆண்டுகளில் சாதாரண இழப்புத் துயரம் தானாகக் குறையும். நெருக்கமானவர்களுடன் தன் மனவேதனையைப் பகிர்ந்து கொள்வது இழப்புத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு உதவும்.
தீராத இழப்புத் துயரம்
சில மரணங்கள் தீவிரமான இழப்புத் துயரத்தை உண்டாக்கலாம். தற்கொலைகள், அகால மரணங்கள் போன்றவை ஏற்படுத்தும் துயரம் கடுமையாகவும் நெடுங்காலம் நீடிப்பவையாகவும் அமையலாம். இது தீராத இழப்புத் துயரம் (Unresolved grief) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் தான் இழந்தவரைப் பற்றி பேசும்போது மிகுதியாக உணர்ச்சிவசப்படுகிறார் என்றால், அவர் இன்னும் அந்தத் துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறலாம்.
இறந்தவரின் சடலத்தைக் காணக் கிடைக்காதபோது ஏற்படும் துயரம் இவ்வகையைச் சேர்ந்தது. இறந்தவர் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில், இவர்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். அவர் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பது அடிமனதில் தெரிந்தால்கூட, அதை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.
உதாரணமாக, படிப்புக்காக வெளிநாடு சென்று விபத்தில் இறந்துவிட்ட ஒரு மாணவனின் தாய் (அவருக்கு மகனின் உடல் காணக் கிடைக்கவில்லை) பத்து ஆண்டுகளுக்கு மேலாக எவரையும் தன் மகனின் அறைக்குள் போக அனுமதிக்காமல், அந்த அறையைப் பழசு போலவே வைத்திருந்தார்! இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேர் ‘காணாமல் போனார்கள்’. இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.
தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.