கேல் ரத்னா விருதுக்கு விராட்கோலி பெயரையும், துரோணாச்சார்யா விருதுக்கு டிராவிட் பெயரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி பரிந்துரை
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மிக உயரிய ராஜீவ் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதையும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதையும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான்சந்த் விருதையும் மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விருதுக்கு விராட்கோலியின் பெயர் 2-வது முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2016-ம் ஆண்டில் விராட்கோலியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. அந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷிமாலிக், ஜிம்னாஸ்டிக்கில் 4-வது இடம் பிடித்து சரித்திரம் படைத்த வீராங்கனை தீபா கர்மாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டதால் விராட்கோலிக்கு கிடைக்கவில்லை.
துரோணாச்சார்யா விருதுக்கு டிராவிட்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்த ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் பயிற்சியாளருமான டிராவிட்டின் பெயர் துரோணாச்சார்யா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் யார்? என்பதில் எழுந்த சர்ச்சை காரணமாக இந்த விருதுக்கு பயிற்சியாளர்களின் பெயரை சிபாரிசு செய்யாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் இருந்து வந்தது. தற்போது டிராவிட்டின் பெயரை பரிந்துரைத்துள்ளது.
வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான்சந்த் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மந்தனா ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டு இருந்தன.
யுகி பாம்ப்ரி, போபண்ணா
விராட்கோலிக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது கிடைத்தால் இந்த விருதை பெறும் 3-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார். ஏற்கனவே தெண்டுல்கர் (1997-98), டோனி (2007) ஆகியோர் ராஜீவ் கேல் ரத்னா விருதை பெற்றுள்ளனர்.
இதேபோல் டென்னிஸ் வீரர்கள் யுகி பாம்ப்ரி, ரோகன் போபண்ணா ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு இந்திய டென்னிஸ் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.